சென்னை:சென்னை பாஜகவின் மாநில மகளிர் அணி நிர்வாகியாக பதவி வகித்து வருபவர் நதியா. இவருடைய கணவர் சீனிவாசன் வழக்கறிஞராக உள்ளார். இவர்கள் அண்ணா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சீனிவாசன் அண்ணா நகரில் உள்ள தனது நண்பரை சந்திக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள், சீனிவாசனை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசனை மீட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இந்நிலையில், தற்போது சீனிவாசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.