மதுரை:மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர், அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்றதாகவும், அந்த பயணிகளை ஏற்றியதற்கான பணத்தை தனது போன் மூலமாக பெற்றுக் கொண்டு பேருந்து உரிமையாளரிடம் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்ற விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மதுரையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர்.
மேலும், விசாரணையை நடத்துவதாகக் கூறி ஓட்டுநரின் கைகளை பின்னோக்கி ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து நீண்ட நேரம் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்றைய தினம் (ஜூலை 24) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தாக்கப்பட்டதாக கூறப்படும் ஓட்டுநர் பால் கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய காவலர்கள் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.