சென்னை:ஆபத்தான முறையில் நேற்று (மே 7) அரசுப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர், காவலர்களிடம் சிக்காமல் இருக்க, பேருந்து சென்ட்ரலை நெருங்கியவுடன் மேம்பாலம் மீது பேருந்தை பாதியிலேயே நிறுத்தச் செய்து, கீழே குதித்து நடந்து சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேருந்தின் படிகளில் தொங்குவது, சாலையில் கால்களை உராய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவது, மேற்கூரையில் அமர்வது என சென்னை மாநகரில் அபாயகரமான செயல்களில் அவ்வப்போது ஈடுபடும் கல்லூரி மாணவர்களின் செயல் கேள்வி எழுப்பும் வகையில் இருந்து வருகிறது.
இது குறித்து காவல்துறையினர், போக்குவரத்துக் கழகத்தினர், கல்லூரி நிர்வாகத்தினர் என யார் அறிவுறுத்தியும் மாணவர்களின் இந்த செயல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை விவேகானந்தர் இல்லத்திலிருந்து, 38C வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரையில், ஆபத்தான முறையில் அமர்ந்தபடி, கல்லூரி மாணவர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டு பயணம் செய்தனர்.