கோயம்புத்தூர்: தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் நேற்று (மார்ச் 8) மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மாகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் 30ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி, இன்று (மார்ச் 9) காலை 6 வரை சிறப்பாக நடைபெற்றது. இதில், ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜகி வாசுதேவ் தலைமையிலான இவ்விழாவில், தியானம், மந்திர உச்சாடனங்கள், ஆதியோகி திவ்ய தரிசனம், அருளுரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை 4 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் பங்கேற்று பேசிய குடியரசு துணைத் தலைவர், 'நமது பாரத காலசாரத்தின் முக்கியமான இந்நாளில் கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நாளைக் கொண்டாடுவதில் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக உணர்வதாக' தெரிவித்தார்.
மேலும், பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்லாது, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில ஆளுநர்களும் பங்கேற்றனர். அதோடு முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் மகா சிவராத்திரியையொட்டி, ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தனர்.
தமன்னா, அமலா பால், பூஜா ஹெக்டே, கங்கனா ரனாவத், சந்தானம், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் எனப் பலரும் இரவு முழுவதும் விழுத்திருந்து வழிபாடு செய்தனர். குறிப்பாக, நடிகர் சந்தானம் மனமுருகி கண்ணீர் சிந்தி வழிபாடு செய்தார். நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தனது கையால் பிரசாதம் வழங்கினார்.
மேலும், ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் விடிய விடிய நடைபெற்ற வழிபாடுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், இரவு முழுவதும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இடம் பெற்றிருந்த பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக கவர்ந்தது. இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதியோகி ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பிடித்திருந்தால் சேருங்கள்".. தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரி அறிமுகம்!