சென்னை:தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்துக்கு அளித்த செல்ஃபோன் எண்களில் 34 லட்சத்து 64 ஆயிரம் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன எனவும், 77 லட்சத்து 20 ஆயிரம் எண்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது,"பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் பெயர்களுடன் பதிவு செய்யப்பட்ட செல்ஃபோன் எண்கள் 1 கோடியே 12 லட்சம் உள்ளன. இவற்றில் பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன.
இதன் விளைவாக மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. ஆகவே, மாணவர்களின் பெற்றோர் செல்ஃபோன் எண்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் தொடர்பு எண்கள் சரி பார்க்கப்படுகின்றன.
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எண் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் எளிதில் அனுப்ப உதவியாக இருக்கும்.
'வாட்ஸ் அப் கேட் வே' உடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இணைத்துக் கையெழுத்திட்டு, இந்த புதிய முயற்சியைச் செய்து வருகிறது. இந்த முயற்சியின் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அனைத்திற்கும் விரைவாக தகவல் அனுப்ப முடியும்.
பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் தகவல்கள் அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் செல்ஃபோன் எண்கள் சரிபார்க்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தொடர்பு எண்கள், மொத்தம் ஒரு கோடியே 11 லட்சத்து 85 ஆயிரம் உள்ளன. இந்த எண்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-Educational Management Information System) இணையதளம் மூலம் OTP அனுப்பி சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
34 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தொடர்பு எண்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளன. 77 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்படவில்லை. படிக்கும் மாணவர்களில் 31 சதவீதம் பேரின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. 69 சதவீதம் மாணவர்களின் செல்ஃபோன் எண்கள் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.
இந்த எண்களை பள்ளி திறப்பதற்கு முன்னர் சரிபார்க்க வேண்டும் என கல்வித் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் செல்ஃபோன் எங்களை கேட்கும்போது அதனை தருவதற்கு சில பெற்றோர்கள் அச்சப்படுவதாக தெரிகிறது.
பெற்றோர் இதுபோன்று அச்சப்படாமல், இதில் சந்தேகம் ஏற்பட்டால் பள்ளிக்கே சென்று தங்களது செல்ஃபோன் எண்ணிற்கு வரும் OTP யை அளித்து வரலாம். மாணவர்களின் கல்வி நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும் உதவிட வேண்டும்" என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. நைஜீரியா, பிரேசிலைச் சேர்ந்த 4 பேர் கைது!