சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் முடிந்தபின், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் முதலமைச்சராக இருக்கும் வரை மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டேன், நிறைவேற்ற முயற்சித்தால் இந்த அரசு தடுத்து நிறுத்தும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானமும், மக்களுக்கு நிரந்தர தீர்வு என்பது ஈழ மக்களிடமும், புலம்பெயர்ந்த மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தி நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இந்த தீர்மானத்தை ஏற்கனவே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறார். அதே போலவே திமுக அரசும், தமிழக முதலமைச்சரும் தீர்மானத்தை நிறைவேற்றை மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தர வேண்டும்.
இதையும் படிங்க :மருத்துவ மாணவி கல்விக்கட்டண விவகாரம்: என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட ஐகோர்ட் மறுப்பு!
வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து 150 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிற முக்கிய அமர்வு நடைபெற உள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால் உலக நாட்டைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய புயல் வெள்ளத்தினால், மழைப்பொழிவின் காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் பாழாகி இருக்கின்றன. லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.2000 தான் அறிவித்திருக்கிறார். இது போதுமான தொகை அல்ல.
ஏற்கனவே கடந்த வருடம் தென் மாவட்டங்களில் மழை பாதிப்பின் போது ரூ.6000 வழங்கிய தமிழக அரசு வட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளுக்கு ரூ.2000 வழங்குவது என்பது ஏற்புடையது அல்ல. இதற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கிறேன். பேரவையை இன்னும் இரண்டு நாட்களாவது அதிகப்படுத்த வேண்டும். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட சட்டங்களை ஆய்வு செய்து நிறைவேற்றுவது ஏற்படுவது அல்ல. சட்டப் பேரவையை நீட்டிக்க வேண்டும்" என்றார்.