வேலூர்:வேலூர் மாநகரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கம்மவான்பேட்டை கிராமம். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் மட்டுமல்ல ஒரே குடும்பத்தில் பலரும் ராணுவத்திற்குச் சென்று சேவை செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்த கம்மவான்பேட்டை கிராமத்திற்கு 1972 ஆம் ஆண்டு ஒரு அரசு விழாவிற்குச் சென்ற அப்போதைய ஆளுநர் கே.கே.ஷா-வை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராணுவ உடையில் வரவேற்றதைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆளுநர் கே.கே.ஷா இனி இந்த கிராமத்தை ராணுவப் பேட்டை என்று அழைக்கலாம் எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இந்த கிராமத்தில் தற்சமயம் சுமார் 4,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. ஆனாலும் கூட 4000 மேற்பட்ட குடும்பத்தினர் தங்களை முழுமையாக ராணுவத்தில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
இன்றைய தேதியில் கம்மவான்பேட்டை கிராமத்திலிருந்து சுமார் 2500 பேர், ராணுவம் உட்பட முப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ,குறைந்தபட்சம் ஒருவர் முதல் ஒரே குடும்பத்தில் 4 பேர் வரை ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் பள்ளி செல்லும் காலத்திலேயே மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கின்றனர். மேலும், இதற்காக பிரத்யேக பயிற்சி மையங்களும் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. அதில் மாணவர்களை உடல் அளவிலும், மனதளவிலும் வலிமைப்படுத்தும் பணியை முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ராணுவ வீரராக ஆகுவதே லட்சியம்:இது குறித்து பள்ளி மாணவன் நந்தகுமார் கூறும் போது, "நான் தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் பல குடும்பங்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் படித்து வருகிறோம். நானும் அதைப் போலத் தான் ராணுவத்தில் சேருவதற்காகப் பயிற்சி எடுத்து வருகிறேன். 12 ஆம் வகுப்பு பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ராணுவ பயிற்சியில் சேர்ந்து ராணுவ வீரராக ஆகுவதே என்னுடைய லட்சியம்" என தெரிவித்தார்.
2ஆம் உலகப் போர் முதல் கார்கில் வரை:ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் கூறுகையில், "ராணுவ பேட்டை என்றாலே எங்கள் ஊர் தான். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் ராணுவத்தில் சேருவதற்காக இரண்டு ராணுவ பயிற்சி மையம் எங்கள் ஊரில் உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்று ஆண்டுக்கு 100 அல்லது 200 இளைஞர்கள் ராணுவத்தில் சேருகின்றனர். இரண்டாம் உலகப் போரில் தொடங்கி கார்கில் போர் வரை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பணியாற்றி உள்ளனர் என நினைக்கும் போது பெருமையாக" உள்ளது என்றார்.
முன்னாள் ராணுவ வீரர் சந்திரன் என்பவர் கூறும் போது, "30 ஆண்டுகளும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். உயிர் நாட்டுக்கு உடல் மண்ணுக்கு என்ற கோட்பாட்டுடன் நாங்கள் எங்கள் கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். இளைஞர்கள் மத்தியில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பெருமைப்படுகிறேன்:ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஸ்வநாதன் கூறுகையில், “1973ஆம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றினேன். இதுவரை கம்மவான்பேட்டையில் இருந்து சுமார் 3000 பேர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் கைம்பெண்களாக உள்ளனர். இந்த வீரம் நிறைந்த மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்" என உணர்ச்சி பொங்கக் கூறினார்.
இதையும் படிங்க:மீன் விரும்பி உண்பவரா நீங்க? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!