வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான இன்று மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடி குப்பத்தை சேர்ந்த தேவன் (வயது 70) என்பவர் தனது மனைவி செல்வியுடன் மனு அளிக்க வந்தார்.
அப்போது அங்குள்ள வாயிலில் நின்று கொண்டிருந்த தேவன் திடீரென மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தேவன் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.
இதையடுத்து இது குறித்து தேவனிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது, “எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விற்று கொடுப்பதாக தரகர் ஒருவர் கூறினார். அவர் கூறியதை போல் ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்திற்கு நிலம் விற்பனை செய்து பணத்தைப் பெற்றோம்.
அப்போது தரகர் உங்களுக்கு குழந்தை இல்லாததால் உங்கள் வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பு இருக்காது எனவே வங்கியில் கணவன் மனைவி பேரில் தலா 5 லட்சம் டெபாசிட் செய்வதாகவும் மீதமுள்ள ரூ.60 ஆயிரத்தை கையில் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சீமானுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்.. மதிமுக புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன?
இதனை உண்மை என நம்பி தரகரிடம் பணத்தைக் கொடுத்து வைத்தோம். பின் நாங்கள் வங்கிக்கு சென்றபோது தரகர் வங்கிக்கு வராமல் ஏமாற்றி விட்டார். அவரிடம் பணத்தை கேட்டால் கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கிறார். எனவே எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதேபோல் கே.வி.குப்பம் அடுத்த அன்னங்குடி புதிய தேருவை சேர்ந்தவர் சரா சந்திரன் (வயது 42) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றார். அதை பார்த்த போலீசார் சராசந்திரன் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து சராசந்திரன் கொடுத்த மனுவில் கூறியதாவது,“என்னுடைய குடும்பம் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகிறது. என்னுடைய சகோதரர்கள் வசதியாக வாழ்ந்து வருகின்றனர். எனவே வீடு கட்டிக்கொள்ள எனது தந்தையிடம் 2 சென்ட் இடத்தை தர வேண்டும் என கேட்டால் தர மறுக்கிறார். எனது தந்தையிடமிருந்து இரண்டு சென்ட் இடத்தை வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
ஈடிவி பாரத்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்