சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து வேளாங்கண்ணி வரை செல்லக்கூடிய வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என சமீபத்தில் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி ரயில் நிலையம் வரை செல்லும் 06037 என்ற எண்கொண்ட வாராந்திர சிறப்பு ரயில் மே மாதம் 24, 26 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜூன் மாதம் 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளிலும் சென்னையிலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல மறுவழித்தடத்தில், 06038 என்ற எண்கொண்ட, வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் மே மாதம் 25, 27 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜூன் மாதம் 3, 8, 10, 15, 17 ஆகிய தேதிகளிலும் வேளாங்கண்ணியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வருகின்ற 24ஆம் தேதியன்று, வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலின் (06038) நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.