சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தங்களது கார்களை பாதுகாக்கும் பொருட்டு, வேளச்சேரி மடிப்பாக்கம் பகுதி மக்கள், கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஃபெஞ்சல் புயலாக (Cyclone Fengal) மாறியதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்:புயல் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ராம் நகர், ஏஜிஎஸ் காலனி, வேளச்சேரி, விஜயநகர், தரமணி, கோவிலம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள், வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களுடைய கார்களை பாதுகாப்பாக்க நிறுத்தியுள்ளனர். இவற்றை இந்த படத்தில் காணலாம்.
இதையும் படிங்க:ஃபெஞ்சல் புயல் தாக்கம்: சாலையில் தேங்கிய மழைநீர்; பணியில் மாநகராட்சி ஊழியர்கள்!
அதேபோல், பள்ளிக்கரணை நோக்கி செல்லும் ரயில்வே மேம்பாலம் மற்றும் தரமணியில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலை நோக்கி செல்லும் 2 மேம்பாலங்களிலும் பொதுமக்கள் கார்களை நிறுத்தியுள்ளனர். முன்னதாக, கடந்த மாதம் பெய்த கனமழையின் போது இதேபோன்று வேளச்சேரி சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பாலங்களில் நிறுத்தி வைத்தனர்.
அப்போது போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்திற்கு இடையூறாக கார்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி அபராதங்கள் விதித்தனர். இதற்கு, பொதுமக்கள் மழைக்கு அஞ்சி கார்களை மேம்பாலத்தில் நிறுத்தியதால், அபராதம் விதிக்கக்கூடாது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து கார்களுக்கு விதித்த அபராதங்களை தாம்பரம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையினர்கள் தரப்பில் திரும்ப வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீரில் மூழ்கிய பேருந்து பணிமனை:காலை முதலே கனமழை பெய்து வருவதால், போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பேருந்துகள் பாதி மூழ்கிய நிலையில் செல்வதாக சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது. பூந்தமல்லி மேம்பாலம் மீதும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கிய ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்து வருவதால், புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மூடப்பட்டது சென்னை விமான நிலையம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை