தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி, வெங்காயம் விலை.. ஒரு கிலோ இவ்வளவா? - Vegetables price today in Koyambedu

VEGETABLE PRICE RISE: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Vegetables
காய்கறிகள் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 2:59 PM IST

Updated : Jun 14, 2024, 3:06 PM IST

சென்னை:கோயம்பேடு மார்கெட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் வரையும், வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு ஏன்? தக்காளி, வெங்காயம் விலை குறித்தும் காய்கறிகளின் விலை உயர்வு குறித்தும் கோயம்பேடு காய்கனி, மலர் வியாபார சங்கப் பொருளாளர் சுகுமாறன் கூறுகையில், “கடந்த மூன்று நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. எனவே, தக்காளி விலை நேற்றைக்கு கிலோ 50 ரூபாய்க்கு இருந்த நிலையில், இன்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், வெளிமாநிலங்களில் அதிக வெயிலால் பயிர்கள் வாடியதில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தினமும் 100 லாரிகளில் (1,000 டன்) வர வேண்டிய தக்காளி, வெங்காயம் வரத்து, 60 லாரியாக (500 டன்) குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பிற மாநிலங்களின் இறக்குமதி: மேலும், சென்னை கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் பலவகையான காய்கறிகள் வருகிறது. மேலும், இந்த மார்கெட்டுக்கு வரும் தக்காளி, வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் மாவட்டங்களிலிருந்து 5 விழுக்காடு மட்டும் தான் வருகிறது. மீதம் 95 விழுக்காடு மற்ற மாநிலங்களிலிருந்து தான் இறக்குமதியாகிறது. எனவே, வெளி மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதேபோல், கோயம்பேடு சந்தைக்கு தினமும் 450-500 வரை காய்கறி வாகனம் வர வேண்டிய நிலையில், தற்போது 350 வாகனங்கள் தான் வருகிறது.

காய்கறிகள் விலை உயர்வு:மேலும், பீன்ஸ் வரத்துக் குறைவால் கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, பீன்ஸ் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், அவரைக்காய் 1 கிலோ 40 ரூபாயிலிருந்து இன்று 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சைப் பட்டாணி 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், வெண்டைக்காய், சௌசௌ, முள்ளங்கி ஆகியவை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெரும்பாலான காய்கறிகளின் விலை இந்த வாரம் அதிகரித்துள்ளது. அதில் பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவை ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய், கத்தரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட் 50 ரூபாய்க்கும், நூக்கல் 70 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், விற்பனையாகிறது. இந்நிலையில், வரும் மாதங்களில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறியின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது” என கோயம்பேடு காய்கனி, மலர் வியாபார சங்க பொருளாளர் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் விலை என்ன?

Last Updated : Jun 14, 2024, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details