சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டு 'விசிக விருதுகள் வழங்கும் விழா' நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது':அந்தவகையில் இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) கோலாகமாக நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது', இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசனுக்கு 'மார்க்ஸ் மாமணி விருது', இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் எஸ்றா சற்குணத்திற்கு 'காமராசர் கதிர் விருது' வழங்கப்பட்டது.
மேலும் பேராசிரியர் ராஜ் கௌதமனுக்கு 'அயோத்திதாசர் ஆதவன் விருது', வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தருக்கு 'காயித்தே மில்லத் பிறை விருது', தொல்லியல் அறிஞர் சுப்பராயலுவிற்கு 'செம்மொழி ஞாயிறு விருது'ம் வழங்கப்பட்டது.
விருதுகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் திருமாவளவன் பேசியதாவது, "வேங்கை வயலில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. குடிக்கிற தண்ணீரில் மனித கழிவைக் கலக்கிறான். மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே சாதிப்பெயரைச் சொல்லும் நிலை உள்ளது.
'சனாதனம்' ஆயிரம் மோடிகளை உருவாக்கும்?: தலித் அல்லாதவர்களையும் அரசியல் படுத்த வேண்டும். குறிப்பாக, ஓபிசி மக்களை அரசியல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை தோற்றுவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்று கருத முடியாது. சனாதன சக்திகளால் (Sanātana) ஆயிரம் மோடிகளை உருவாக்க முடியும்.
மோடி இந்த தேர்தலில் தோற்றுப்போனால் மோடியை விட, ஆயிரம் மடங்கு வலிமை பெற்ற ஆட்களை அவர்களால் உருவாக்க முடியும். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அவர்கள் ஓடி போவார்கள். ஆனால், மீண்டும் வராமல் தடுக்க வேண்டும். தேர்தலில் ஒரு கட்சியை தோற்கடித்து விட்டோம் எல்லாம் முடிந்தது என்று இருக்க முடியாது.
அரசியலில் உழைக்கும் மக்களின் ஒற்றுமை: வெற்றி மாறன், பிரகாஷ் ராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்று பேசுபவர்கள் இன்னும் திரைக்கு வர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் உழைக்கும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது தான் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் முன் வைத்த அரசியல்.
திருவள்ளுவர் மீது காவிச்சாயம்:ஆனால், சனாதனவாதிகள் மிக லாவகமாக இதை உடைத்துவிட்டார்கள். இந்துத்துவா அஜென்டா மூலம் நீயும் இந்து, நானும் இந்து என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டார்கள். திருவள்ளுவருக்கு காவி உடுத்தி தன்வயப்படுத்தும் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் யார்? இன்னும் இந்த சனாதனத்தின் மீது நம்பிக்கை வைத்து உள்ள உழைக்கும் மக்கள் அரசியல்படுத்தப்படாமல் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“படிப்பு முக்கியம்பா..” 2 ஆண்டுகளாக இருண்டு கிடந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்த அரசுப் பள்ளி மாணவி!