சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அறிவிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு கல்லீரல் செயல் இழப்பு காரணமாக, அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த சாந்தனுக்கு நேற்று (பிப்.27) இரவு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
செயற்கை சுவாசம் மூலம் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (பிப்.28) அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளபட்டும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.