காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் திருநெல்வேலி:தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழந்தை கடத்தல் கும்பல் உலா வருவதாக சமூக வலைத்தளங்களில் கடந்து சில தினங்களாக தகவல்கள் பரவியது. ஆனால், இவ்வாறு தவறான தகவலை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த வகையில், குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கோயா, குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குறுஞ்செய்தியை, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, குழந்தை கடத்தல் தொடர்பான தவறான காணொலி விவரங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்காக, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அப்துல் கோயாவை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்துல் கோயாவை உடனடியாக விடுவிக்க கோரியும், விடுதலை சிறுத்தை கட்சியின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்துல் கோயா மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா, கைது நடவடிக்கை இருக்குமா என்பது குறித்து விசாரணைக்குப் பின் தெரிய வரும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம்; தவெக சார்பில் நெல்லையில் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு