சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், திலீபனின் 37 வது நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏத்தி மரியாதை செய்தார்.இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொறுமை அவசியம்: இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ''இலங்கையின் தேர்தல் முடிவுகள் யாரையும் யாரும் நசுக்கி விட முடியாது; அதே நேரத்தில் யாரையும் யாரும் எளிதாக கருதி விடக்கூடாது என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார கட்சி ஒரு காலத்தில் நசுக்கப்பட்ட கட்சியாக இருந்தது. கடந்த சில தேர்தல்களில் 3% ஓட்டு சதவீதம் இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் பொறுமையாக இருந்தார்கள். இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள் மக்களோடு நிற்பவரைகளை யாராலும் நசுக்க முடியாது என்றார்.
தொடர்ந்து பேசியவர், ஈழத் தமிழர்களுக்காக மாத கணக்கில் பயணம் செய்தவன் நான். அப்போது இருந்தது திமுக கூட்டணி, கூட்டணியை விட்டு வெளியேறியதாகவும் நான் அறிவிக்கவில்லை, கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் திமுக அறிவிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்காக அதிமுக கூட்டணியிலிருந்து தலைவர்களோடு இணைந்து பயணித்தேன்.
மேலும், ஈழத் தமிழர்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத கட்சி அதிமுக. தேர்தல் அரசியலை மட்டுமே அந்த கட்சி பார்த்தது. முள்ளிவாய்க்கால் பிரச்சனையில் வாக்கு அரசியலுக்காக அற்ப அரசியலை அதிமுக செய்தது என விமர்சனம் செய்த திருமாவளவன், அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்தால்தான் வெற்றியை பெற முடியும் என்றார்.
இதையும் படிங்க:மதுபான குடோனில் ரெய்டு.. லட்சக் கணக்கில் சிக்கிய பணம்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!
சிதம்பரம் தொகுதியில் தனித்து நின்று தலித் ஓட்டுகள் அனைத்தையும் பெற்றால் கூட நம்மால் வெற்றி பெற முடியாது என்பது தான் எதார்த்தம். எதிர்காலம் நம்மை நோக்கி வரும்.. அதிகாரம் நம்மை நோக்கி வரும்.. கூட்டணி முறிந்து போனால் என்னவாகும் என்ற நிலைதான் உள்ளது. நாம் ஒரு கொள்கை கூட்டணியோடு பயணித்து வருகிறோம். அதனால் சேஃபர் சோன் இல்லாமல் பயணிக்க முடியாது என்றார்.
எலி கதை:தொடர்ந்து பேசிய திருமாவளவன், எலியின் அறிவை விளக்கும் வகையில் ஒரு குட்டி கதையை சொன்னார். அதாவது, நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். வரகு விவசாயம் செய்யும்போது வயலில் அதிகளவு எலிகள் இருக்கும். அந்த எலிகள் வரகுகளை கொண்டு சென்று அதனுடைய பொந்துக்களில் சேகரித்து வைக்கும். எலி குஞ்சுகளுக்கு படுக்கை வசதிகளை கூட அந்த எலி செய்து வைத்திருக்கும். மேலும், தனக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரும் என்று அந்த எலிகள் தப்பிக்க, பின்பக்கமாக பல வழிகளை தோண்டி அதனை மறைத்து வைத்திருக்கும். எலிகளை பிடிக்க வருபவர்கள் ஒரு வழியை தோண்டிக்கொண்டே செல்லும்போது சுதாரித்துக்கொள்ளும் எலிகள் அந்த ரகசிய வழிகளில் தப்பித்துவிடும். சாதாரண எலிக்கே இந்த அறிவு இருக்கும்போது யுத்த களத்தில் இருக்கும் நமக்கும் அப்படி வழிகள் தேவை என்றார்.
மேலும், எல்லோரும் நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தேர்தல் வியூகங்களை வகுக்குக்கூடிய அளவிற்கு விசிக இன்றைக்கு வளர்ந்து இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை அனைவருக்கும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. ரவிக்குமார் கருத்து தெரிவித்தால் ஏன் அவ்வாறு தெரிவித்தீர்கள் என்று ரவிக்குமாரிடம் கேட்பேன் அர்ஜுனா கருத்து தெரிவித்தால் ஏன் அவ்வாறு தெரிவித்தீர்கள் என்று அவரிடமும் கேட்பேன்.
அவர்களிடம் நான் என்ன கேட்டேன் என்பதை ஏன் உங்களுக்கெல்லாம் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் என்னென்ன நடக்கிறது யாரெல்லாம் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதை கவனிக்க தான் இரண்டு நாட்கள் மௌனமாக இருந்தேன். நாம் நிதானமாக அடி எடுத்து வைக்க வேண்டிய காலம் இது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நாம் எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது. விசிகவை பொறுத்தவரை திருமாவளவன் என்ன பேசுகிறனோ அதுதான் நிலைப்பாடு; மாற்றுக் கருத்துக்கள் ஒன்றும் தவறில்லை என இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்