தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனி சின்னத்தில் வெற்றி...அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுக்கும் விசிக..! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

VCK Becomes a Recognized State Party: நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சி விரைவில் பெறவுள்ளது.

பானை சின்னத்துடன் விிசிக தலைவர் திருமாவளவன்
பானை சின்னத்துடன் விிசிக தலைவர் திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 12:38 PM IST

சென்னை:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இவற்றில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் மட்டுமே, திமுக கூட்டணி கட்சிகள் 40/40 என்று பெற்றுள்ள வெற்றிக்கு கூடுதல் பலனிருக்கும். இல்லையென்றால் கடந்தமுறை போலவே, மத்திய ஆட்சியில் பங்கேற்க முடியாமல், எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டிவரும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் ஒருபுறமிருக்க, திமுக கூட்டணியின் அமோக வெற்றியால் அக்கூட்டணியில், பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

மாநில கட்சி அங்கீகாரத்தை பெறும் விசிக: 2024மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தனித் தொகுதிகளில் போட்டியிட்டது. விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தவைவர் திருமாவளவனும் பானை சின்னத்தில் களம் கண்டனர்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 3,200 வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன், இந்த முறை 5,05,084 வாக்குகள் பெற்று தனது வெற்றியை பதிவு செய்தார். இந்த வாக்குகள், அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட சந்திரகாசனை விட 1,03,554 வாக்குகள் அதிகம்.

அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் 4,77,033 வாக்குகளை பெற்று, 70,703 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட பாக்கியராஜை தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் விடுதலை சிறுத்தை கட்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெறவுள்ளதால், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநில கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கான நிபந்தனைகள்:ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தைப் பெற கீழ்க்கண்ட நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகள் மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இவ்விரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய முடியாதபட்சத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு கட்சி 8 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளின்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றுள்ளதுடன், 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதால், அக்கட்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை எளிதில் பெறவுள்ளது.

இதையும் படிங்க:வடக்கில் இரண்டு.. தெற்கில் ஒன்று.. தாமரை மலராத மாநிலங்கள்!

ABOUT THE AUTHOR

...view details