மயிலாடுதுறை:மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் உள்ள தருமபுர ஆதீன மடத்தில், குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி மாத பெருவிழா கடந்த மே 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று (புதன்கிழமை), ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஆதினம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து சென்றனர்.
அங்கு யானைகளைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்னர் வழிபாடு நடத்தினர். ஞானபிரகாசர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் சுமந்து, ஆதீனத்தின் நான்கு வீதிகளைச் சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகல்வு, நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தருமபுரத்தில் நடக்கும் பட்டணப்பிரவேச நிகழ்விற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.