தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆதவ் அர்ஜுனாவிடம், அவரது கருத்துக்கு விளக்கம் கேட்கப்படும்" - திருமாவளவன் பதில்..! - AMBEDKAR BOOK FUNCTION VIJAY

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 4:01 PM IST

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா நேற்று (டிச.06) மாலை நடைபெற்றது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என கேட்பதில் என்ன தவறு? இங்கு தேர்தல் வாக்கு சார்ந்து தான் அரசியல் நடக்கிறது என கூறியிருந்தார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தவெக தலைவர் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீடு விழாவில் பங்கேற்க இயலாமல் போனதற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை. சுதந்திரமாக நான் எடுத்த முடிவு இது.

நான் ஒரு வேலை இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தால், அதை வைத்து அரசியல் செய்து, திசை திருப்புவதற்கு வாய்ப்புள்ளது. பணிந்து, முடிவெடுக்க இயலாமல் தேங்கி நிற்கும் நிலையில் விசிக இல்லை. ஆனால் அது போல் எந்த ஒரு முறையான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, ஒரு நாளிதழ் தலைப்புச் செய்தியாகிவிட்டது.

விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்றைய (டிச.6) நிகழ்ச்சியில் பேசிய கருத்திற்கு எனக்கு உடன்பாடு இல்லை. அந்தக் கருத்தை நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுக்கிறது. ஆதவ் அர்ஜுனாவிடம் உயர்நிலைக் குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

இதையும் படிங்க:"விஜயின் கருத்தில் உடன்பாடில்லை" - விசிக தலைவர் திருமா ரியாக்சன்!

மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததில் எனக்கு எந்த நெருடலும் இல்லை.‌ கட்சியின் நலன் மற்றும் கூட்டணி நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க உறுதிப்பாட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு. குற்றவாளிகளை மூடி மறைப்பதற்கு தமிழக அரசிற்கு எந்த தேவையும் இல்லை.

வேங்கை வயல் குறித்து பேசும் விஜய் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எங்கே போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என யாரும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள்.

மணிப்பூர் விவகாரத்தில் போராட்டம் நடத்தி இருக்கிறோம். மத்திய அரசு மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு மெத்தனமாக இருந்தது என்று தெரியும். தவெக-வை பொருத்தவரை திமுக அரசை குறை கூற வேண்டும். அதை மட்டும் கூறினால் சரியாக இருக்காது என தெரிந்து அவ்வப்பொழுது பாஜக-வை பற்றியும் பேசுகிறார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details