தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திமுக இதுவரை பொய் பேசியே ஆட்சிக்கு வந்துள்ளது” - வானதி சீனிவாசன் தாக்கு! - Vanathi srinivasan criticized Dmk

Vanathi Srinivasan: கோயம்புத்தூரில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் குடிநீர் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த வானதி சீனிவாசன், திமுகவின் அரசாங்கம் எப்பொழுதும் பொய் பேசுகின்ற அரசாங்கமாகத்தான் இருக்கின்றது என விமர்சித்துள்ளார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 5:37 PM IST

வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் குடிநீர் இயந்திரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார்.

அரசாங்கத்தின் விழாவில் பிரதமரை பற்றி குறை கூறியதும், பாரதிய ஜனதா கட்சி பற்றி குறை கூறியதும், இவை எல்லாம் அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாக நாங்கள் பார்க்கின்றோம். அவர் அதற்கு முன்பாக பேசுகின்ற போது, தமிழகத்திற்கு மத்திய மோடி அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறார். பிரதமர் மோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் அரசு நிகழ்ச்சிகளை இங்கே வந்து துவக்கி வைக்கின்ற போது, பக்கத்திலேயே அமர்ந்து கேட்டிருக்கிறார்.

அப்போது அவருக்கு தெரியவில்லையா, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்காக கொடுத்திருக்கிறார் என்று? அப்பொழுது எல்லாம் உங்களுடைய காதுகளை வசதியாக மூடி வைத்து விட்டீர்களா? தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதைப் பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது. ஆனால், இலை வாடல் நோய் இருக்கின்ற தென்னை மரத்தை வெட்டி எடுப்பதற்கு 10 கோடி ரூபாய் நிதி கொடுப்பேன் என்று கூறுகிறார்.

பொய் பேசி ஆட்சியைப் பிடித்தது: தென்னை விவசாயத்தை காப்பாற்றுவதற்கு உதவி செய்யுங்கள் என்று நாங்கள் கேட்கின்றோம். ஆனால், மரத்தை வெட்டி போடுவதற்கு பணம் கொடுக்கிறார்கள். விவசாயம் பற்றி உங்களுடைய அக்கறை இதுதான் முதலமைச்சரே. பாஜகவினர் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி வைத்து பொய் பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் திமுகவிற்கு சொந்தமானது. திமுக கிட்டத்தட்ட 1967 முதல் பொய் பேசிதான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் அரிசி எவ்வளவு கொடுப்பேன் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு கூறினீர்கள்? இன்றைக்கு மூன்று படி. அதன் பிறகு, ஒரு படி என்று பொய் பேசி ஆட்சியைப் பிடித்தது நீங்கள்தான். இந்த வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி பொய் பேசுவது, இது எல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை. முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக என்று கூறினீர்கள். இன்றைக்கு வரைக்கும் அது பொய்தான். அதை நீங்கள் மாற்றவே இல்லை. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு எங்கே தடுத்தது என்று கூறினீர்களே.

சென்னை - சேலம் எட்டு வழி சாலை மத்திய அரசு கொடுக்கின்ற போது தடுத்தது யார்? இப்படி பல்வேறு விஷயங்களை சொல்லலாம். இந்த மாதிரி ஒவ்வொரு முறை மத்திய அரசு திட்டம் வருகின்ற போதும் அதற்கு ஏதாவது ஒரு விதத்தில் தடுத்து நிறுத்தி, மத்திய அரசின் திட்டங்களையும் மத்திய அரசுக்கு எதிராக கெட்ட பெயரையும் உருவாக்க முயற்சி செய்தீர்கள். அந்த நோக்கம் 2019-ல் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் 2024 தமிழக மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்படி எல்லாம் போய் பேசுகிறீர்கள் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 19இல் போட்ட கணக்கு வெற்றியை கொடுத்திருக்கலாம். 24 கணக்கு வெற்றி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் கிளி பிடித்தது போல் இருப்பது திமுகவிற்கு தான்.

அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்: அதனால் இந்த வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி, பொய் பேசுகிறார்கள், மத்திய அரசு எதுமே செய்யவில்லை உள்ளிட்ட திமுகவின் பொய்களும், பொய் வாக்குறுதிகளும் ஒவ்வொரு நாளும் மக்களிடத்தில் அம்பலப்பட்டு கொண்டிருக்கின்றது. இலவச பேருந்து பயணம் என்றீர்கள். ஆனால் பேருந்து இல்லை. பொம்பளைகளை பார்த்தால் பேருந்து நிற்காது. ஏனென்றால் இலவசமாக கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான். பொய் பேசுவது என்பது திமுகவின் கலை.

இதை வைத்துக்கொண்டு அரசு மேடையை இனிமேல் அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. எத்தனை முறை பட்டியலை கொடுக்க முடியும். 11 மருத்துவக் கல்லூரிகள், டிபன்ஸ் காரிடர் (Defense Corridor) போன்றவை எல்லாம் யார் கொடுத்தது?, இன்றைக்கு அறிவித்த தென்னை விவசாயிகள் நாடு முழுவதும் விற்றுக் கொள்ளலாம் என்ற திட்டமும் மத்திய அரசின் திட்டம் தான்.

பொய் பேசுகின்ற அரசாங்கம்:ஆவாஸ் யோஜனா திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஏழை விவசாயிகளின் வங்கி கணக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது மத்திய அரசு. இவை அனைத்தும் தமிழ்நாட்டிற்கு வரும் பலன் தானே. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கத்தை நான் கூறுகிறேன். திமுகவின் அரசாங்கம் எப்பொழுதும் பொய் பேசுகின்ற அரசாங்கமாகத்தான் இருக்கின்றது. 1967இல் இருந்து இதே தான் செய்து வருகின்றது.

ரூ.1,600 கோடிக்கு நலத்திட்டம்:நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஒரு அரசாங்கம் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும். அதுதான் மாநில முதலமைச்சரின் கடமை. ஒவ்வொரு முறையும் நான் போராடி வாங்கி வந்த ரோட்டை, மாநில முதலமைச்சர் ஓடி வந்து கணக்கு சேர்த்து இப்போது ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு நலத்திட்டம் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

சிறுபான்மையினருக்கும் எதிரானது அல்ல:இது அரசியல் இல்லையா?, 15 அங்கன்வாடி கட்டுவதற்கு 10 பாலங்கள் கட்டுவதற்கு எதற்கு முதலமைச்சர் அறிவிப்பு கொடுக்க வேண்டும். இதெல்லாம் முதலமைச்சர் செய்ய வேண்டிய அறிவிப்பா? இது அரசியல் இல்லாமல் வேறு என்ன?. குடியுரிமை திருத்த சட்டத்தை பொருத்தவரைக்கும் எந்த ஒரு சிறுபான்மை மதத்தினருக்கும் எதிரானது அல்ல.

பக்கத்து நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்த நாட்டிற்கு அடைக்கலமாக வந்திருக்கக்கூடியவர்கள், இந்த நாட்டினுடைய குடியுரிமை பெற அவர்களுக்கு இருக்கின்ற கால அளவினை குறைத்து, 5 வருடம் அவர்கள் இருந்தால் போதும் என்ற ஒரு சலுகை மட்டும் தான் சிஏ சட்டம். தங்களுடைய அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களை தூண்டி விடுகிறார்கள் என்பதுதான் எங்களுடைய பதில்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"இந்த காரணங்களுக்கு தான் சிஏஏ-வை எதிர்க்கிறோம்" - இஸ்லாமியர்கள், வழக்கறிஞர் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details