சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக முழுவதும் திமுக அதிமுக பாஜக வெளியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் வருகின்ற 27ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். அப்போது கலாநிதி வீராசாமிக்கு 2ம் எண் டோக்கன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் முதலில் வந்ததாகவும், கலாநிதி வீராசாமி தாமதமாக வந்த நிலையில், முதலில் கலாநிதி வீராசாமி வேட்பு மனு தாக்கல் செய்யத் தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்றதால் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இளைய அருணா, காவல்துறை பதிவேட்டில் 10 மணிக்கே பதிவு செய்திருந்தார். அந்த வகையில் முறையாக எங்களுடைய வரிசை எண் இரண்டு, அதிமுக வரிசை எண் 7. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றவுடன், எங்களுடன் அவர்களும் உள்ளே வந்துவிட்டு எங்களுடைய வேட்பு மனுவைத் தான் முதலில் பெற வேண்டும், எங்களுடைய வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
எங்கேயும் சட்ட விதிமீறல்கள் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டதற்கு இணங்க, இந்த தேர்தலை அமைதியாகச் சந்திக்க வேண்டும், எங்கும் ஒரு சிறு அசம்பாவிதத்திற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நல்வழிகாட்டுதல்படி, நாங்கள் அமைதியாகத் தேர்தல் அலுவலரிடம் முறை கேட்டுக் கொண்டிருந்தோம்.
மேலும், அவதூறு பேச்சுகளை அதிமுகவினர் அந்த அறையில் பேசினர், யார் முன்பு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலை வந்த பொழுது, அவர்களே திமுக தேர்தல் மனு தாக்கல் செய்த பிறகு நாங்கள் தாக்கல் செய்து கொள்கிறோம் என்று கூறிய பிறகும் கூட அங்கிருந்த சில அதிமுகவினர் நீங்கள் முதலில் செய்யுங்கள் என்று கூறினார்கள்.