கோயம்புத்தூர்:கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் (Myv3 Ads) நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் (V3 ONLINE TV) உரிமையாளர் விஜயராகவன், மோசடி புகாரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது நேற்று (மார்ச் 2) செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் உடல்நிலை பிரச்னை காரணமாக மூன்றாவது முறையாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Myv3 Ads நிறுவனத்துக்கு சித்த மருத்துவ பொருட்கள் அனுப்புவது தொடர்பாக V3 சேனல் உரிமையாளர் விஜயராகவனிடம் போலீசார் நடத்திய விசாரணயில், அவர் போலி சான்றிதழ் வைத்துக்கொண்டு மருந்து தயாரித்து வருவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் கைது செய்யப்பட்ட பொழுது நெஞ்சுவலி என்று கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு உடல் நிலையில் எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறியதால், போலீசார் அவரை கோவைக்கு அழைத்து வந்தனர்.