சென்னை:சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டு தொழிலதிபரிடமிருந்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவரின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்' நேற்று(ஜன.25) காலை 10:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருப்பதால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு பயணியின் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரூபன் (52) என்ற பயணி வந்துள்ளார். அப்பொழுது அவரது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள் அவரது கைப்பைக்குள் இருந்து சாட்டிலைட் போன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
நமது நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிக்க காப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் அமெரிக்க பயணி பயணம் செய்ய முயன்றது பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் ஆண்ட்ரூ ரூபன் என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவரின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.