தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிகவுக்கு உள்ளேயே விலக்கி வைக்கப்படுகிறாரா ஆதவ் அர்ஜுனா? - சர்ச்சையின் பின்னணி என்ன? - Action against Aadhav Arjuna - ACTION AGAINST AADHAV ARJUNA

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஏன் ஆக கூடாது என்பது போன்ற சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து கூறி வந்ததால் கட்சிக்கு உள்ளேயே அவர் தனிமைப்படுத்தப்படக்கூடிய சூழல் எழுந்துள்ளது.

ஆ.ராசா, திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா
ஆ.ராசா, திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா (Image Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 8:13 PM IST

Updated : Sep 26, 2024, 11:39 AM IST

சென்னை:தனியார் தொலைக்காட்சிகளுக்கு அண்மையில் அளித்த தொடர் பேட்டிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சரவையில் பங்கு குறித்தும், வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது. மேலும் சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஆக கூடாது போன்ற சர்ச்சை கருத்துகளை கூறி வந்தார்.

அவரின் இந்த கருத்துகள் திமுக - விசிக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை கருத்து குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ''மதவாதத்தை ஒழித்து, சமூக நீதியை காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறத்துக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல.

இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும்'' என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

ஆ.ராசாவின் பேட்டிக்கு கருத்துத் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ''திமுக - விசிக இரு கட்சிகளுக்குமிடையே எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை ஒட்டி பலரும் விவாதத்தில் ஈடுபட்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. ஆனால் திமுக , விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை," என்று இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.

செந்தியாளர்கள் சந்திப்பின் போது திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா (Credit - @AadhavArjuna)

விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ''கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி பின்னரே எந்த நடவடிக்கையும் இருக்கும். கட்சி விவகாரங்கள் குறித்து முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்து உள்ளேன். மீண்டும் அவர்களுடன் கலந்துபேசி அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க :ஆதவ் அர்ஜுனா பேச்சு உட்கட்சி விவகாரம்! ஆ.ராசாவுக்கு திருமாவளவன் காட்டமான பதில்

இந்நிலையில் தொடர்ந்து விசிக, திமுகவுக்கு எதிரான கருத்துகளை ஆதவ் அர்ஜுனா கூறி வரும் நிலையில் திமுக - விசிக உறவு எப்படி உள்ளது, வருகிற தேர்தலில் விசிக திமுக கூட்டணி தொடருமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் ஈடிவி பாரத் முன் வைத்தது. இதற்கு பதில் அளித்த அவர், "திமுக - விசிக கூட்டணி தொடரும் என்று தான் திருமாவளவன் தற்போது வரை கூறிவருகிறார். அதே நேரத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அதிகாரத்தில் பங்கு குறித்து பேசுவது வேறு விவகாரம்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க வந்தவர் துணை முதல்வர் பதவிக்கு விருப்பப்படுகிறார் என்று கூறுவது தனிப்பட்ட விவகாரமாகும். உதய நிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட உள்ள நேரத்தில் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் பிரமுகர் இப்படி பேசலாமா என்பதை அவர் சிந்தித்திருக்க வேண்டும்.

விசிக இல்லாமல் திமுக வட மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது என்று ஆதவ் அர்ஜுனன் கூறியிருப்பது அறியாமை அன்றி வேறு ஒன்றும் இல்லை. வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும். அதிகாரத்தில் பங்கு கொடுத்தே ஆக வேண்டும் என கூறினால் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி எப்படி அதனை ஏற்றுக்கொள்ளும்?

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவனிடம் விசிகவிற்கு உள்ளேயே புகார் சென்றுவிட்டது. ஆதவ் அர்ஜுனா பாஜக-வின் குரலாக விசிகவுக்கு உள்ளே செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளை பார்க்கும்போது திமுகவிடம் இருந்து விசிகவைப் பிரிக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்தை ஆதவ் அர்ஜுனா பிரதிபலிப்பதாகவே தெரிகிறது.

அதவ் அர்ஜுனா பேச்சில் உள்நோக்கமா?:திமுக - விசிக கூட்டணியை உடைக்க ஆதவ் அர்ஜுனா நினைக்கிறார், ஆனால் விசிகவில் உள்ள மற்ற தலைவர்கள் திமுக உடன் கூட்டணி வைக்கவே விரும்புகின்றனர். ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துகள் திமுகவிடம் சீட் எண்ணிக்கையை உயர்த்த பயன்படும என திருமாவளவன் முதலில் நினைத்தார் ஆனால் ஆதவ் அர்ஜுனா செயல்பாடுகளில் உள்நோக்கம் இருப்பதை இருப்பதை திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அறிந்து கொண்டதால் விசிக உள்ளேயே அவர் தனிமைப்படுத்தப்படும் சூழல் எழுந்துள்ளது. விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் திமுக எப்படி அமைச்சரவையில் பங்கு தரும்? தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் இயற்கையாகவே கூட்டணி ஆட்சி அமையும். பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் போது எப்படி கூட்டணி ஆட்சி அமையும்? வரப்போகும் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வராது. அந்த வகையில் வலிமை இழந்துள்ள அதிமுகவே அதிகாரத்தில் பங்கு தர மாட்டோம் என கூறுகிறது.

கூட்டணிக்குள் விரிசல்:தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள திமுக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என எப்படி கூறுவார்கள்? கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியை பிரச்சனைக்கு உள்ளாக்கினால் ஒரு அளவு வரை தான் அவர்கள் பொறுத்துகொள்வார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் திருமாவளவன் தான் இப்படி பேச சொல்லி இருக்கிறார் என்று நினைத்து கொள்வார்கள். சந்தேகம் வந்துவிட்டால் உடைந்த கண்ணாடி ஒட்டாது என்பது போல் ஆகிவிடும். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகும் ஆதவ் அர்ஜுனா இதே போல் பேசி வந்தால் கூட்டணிக்குள் கடும் விளைவுகள் ஏற்படும்.

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பாக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள், காஞ்சிபுரத்தில் நடைப்பெறும் திமுக கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. திருமா கலந்து கொள்ளாமல் வேறு யாராவது பங்கேற்றால் சந்தேகத்தை ஏற்படுத்தும். 2026 யில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற பாஜகவின் குரலையை அப்படியே ஆதவ் அர்ஜுனா எதிரொலிக்கிறார்.

திமுகவிற்க்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறுவதை கூட்டணி தலைமை தாங்கும் கட்சி எப்படி ஏற்கும்?
திமுகவிற்கு எதிரான ஓட்டுகள் பிரியும் வரை திமுக வெற்றி பெற்று கொண்டே இருக்கும். திமுகவிலிருந்து விசிக பிரிந்தால் விசிக வாங்கும் ஓட்டுகள் வராது. திமுக உடன் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் வாக்குகள், சில இடங்களில் வன்னியர்கள் வாக்குகள் மற்றும் வன்னியர் அல்லாதோர் வாக்குகளை விசிக வாங்குகிறது.

ஒரு வேளை விசிக அதிமுகவுடன் சேர்ந்தால் அதிமுகவிற்கு விழும் வன்னியர் வாக்குகளும் அதிமுகவிற்க்கும் விழாது. விசிக விற்க்கும் விழாது, வன்னியர் அல்லாதோர் வாக்குகளும் விழாது, பட்டியலின வாக்குகளும் பிரிந்துவிடும் இதனால் திருமாவளவனுக்கு நஷ்டம் தான் ஏற்படும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளவரை எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் பிரச்சனை செய்தால் தான் திமுகவிற்கு சிரமம் ஏற்படும்.

காங்கிரஸ் உள்ள அணிதான் மதசார்பற்ற அணியாக இருக்கும். விசிக இல்லையென்றாலும் வட மாவட்டங்களில் திமுக தோல்வி அடையும் வகையில் பாதிப்பு இருக்காது. ஆதவ் அர்ஜுனா மாமனார் மீது அமலாக்கதுறை வழக்கு உள்ளது அதை வாபஸ் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், பாஜக மிரட்டுவதாலும் இப்படி பேசுகிறார்.

பாஜக திட்டமிட்டு விசிகவின் உள்ளே ஆதவ் அர்ஜுனாவை அனுப்பியுள்ளது. கூட்டணி ஆட்சி அமையும் என எப்போது அவர் கூறினாரோ அப்போதே தெரிந்துவிட்டது ஆதவ் அர்ஜுனா பாஜகவின் ஆள் தான் என்று. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தால் துணை முதல்வர் பதவி கொடுப்பதை திமுக தள்ளி போட மாட்டாது. நினைக்கும் போது கொடுத்துவிடுவார்கள். தேர்தலுக்கு முன்னர் கொடுக்கலமா வேண்டாமா?சரியான நேரம் தானா?என்று யோசிக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனாவின் கருத்தால் அல்ல" என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் நம்மிடம் கூறினார்.

ஆதவ் அர்ஜுனா சர்ச்சை விவகாரம் தொடர்பாக கருத்து கேட்க ஆர்.எஸ்.பாரதியிடம் தொடர்பு கொண்டோம், அப்போது, இதுகுறிது நாங்கள் பேச ஒன்றுமில்லை, விசிக தலைவர் திருமாவளவனே கருத்து தெரிவித்துவிட்டார்" என்று கூறினார்.

Last Updated : Sep 26, 2024, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details