தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் கையெழுத்துடன் சான்றிதழா, துணைவேந்தர் நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை பணியாளர்கள் போர்க்கொடி! - madras university Vice Chancellor - MADRAS UNIVERSITY VICE CHANCELLOR

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் இல்லாமல் நடத்தக்கூடாது என பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈட்டுபட்ட ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈட்டுபட்ட ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 5:35 PM IST

சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இல்லாமல், வேறு ஒருவரின் கையெழுத்தோடு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினால் அது செல்லாது என்பதால், துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டாத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் சுமார் 13 மாதமாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளதால், பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்குள் துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டாத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் பாலகிருஷ்ணன், எஸ்சி எஸ்டி சங்கத்தின் தலைவர் காளிதாஸ் ஆகியோர் கூறியதாவது, “சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், பல்கலைக்கழகத்தில் ஒரு வருட காலமாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதை வலியுறுத்தியும் இன்று போராட்டம் நடைபெறுகிறது.

துணைவேந்தரின் கையொப்பம்:மாணவர்களின் பட்டப் படிப்பு சான்றிதழில் துணைவேந்தரின் கையொப்பம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது சென்னை பல்கலைக்கழகத்தின் விதியாக இருக்கிறது. எங்களது முதன்மை கோரிக்கை துணை வேந்தரை நியமிக்க வேண்டும். துணை வேந்தர் அல்லாமல் வேறு ஒருவரின் கையெழுத்தோடு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினால் அது செல்லாது. பட்டமளிப்பு விழாவில் கையொப்பமிட வேண்டிய துணைவேந்தர் இதுவரையில் நியமிக்கப்படாமல் உள்ளதால், இம்மாத இறுதியில் பட்டமளிப்பு விழாவை நடத்த முடியாது.

இதையும் படிங்க:சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு புதிய சிக்கல்.. கல்வியாளர்கள் வைக்கும் கோரிக்கை!

கோரிக்கைகள்:கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாமல் நிலுவையிலே உள்ளது. நீண்ட நாட்களாக காலியாக இருக்கும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. தேவையான எண்ணிக்கையை விட மிகவும் குறைவான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை வைத்து பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

ஆளுநர் கையெழுத்துடன் சான்றிதழ்? வரும் 24ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை நடத்துவதாகவும், பட்டமளிப்பு சான்றிதழில் வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதாகவும் இன்று கூடும் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

சான்றிதழ் செல்லாது: ஆளுநரின் கையொப்பத்துடன் சான்றிதழ் இருப்பினும், மேற்படிப்பு அல்லது உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அந்த சான்றிதழ் செல்லாத சூழல் ஏற்படும். எனவே, சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்பி அதன் பிறகு பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும். துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் பட்டமளிப்பு விழா நடப்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

பல்கலைக்கழகத்திற்கு அரசு வழங்கப்பட வேண்டிய ரூ. 80 கோடி நிதி மானியம் கிடப்பில் இருக்கிறது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ரூ. 60 கோடிவரையிலான ஓய்வூதிய நிதியும் வராமல் இருக்கிறது. இதனால் 300க்கும் அதிகமான ஊழியர்கள் எந்த ஒரு பலன்களையும் அனுபவிக்காமல் இருக்கின்றனர். அரசாங்கத்தில் உள்ள சில அதிகாரிகள் செய்யும் செயல்பாடுகளால் அனைத்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகமும் ஸ்தம்பித்து உள்ளது. உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்.

பணி நெருக்கடி:பல்கலைக்கழகத்தில் 1,400 அலுவலர்கள் இருக்க வேண்டிய நிலையில் 350 பேர் பணியாற்று கின்றனர். 500 பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 150 பேராசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.தற்காலிக ஆசிரியர்களை வைத்தே பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதனால் கடுமையான பணி நெருக்கடி ஏற்படுகிறது. துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு நாளும் பல கோப்புகள் நகர்த்தப்படாமல் கிடப்பிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details