தருமபுரி:தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு 1,800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக அளவீடு பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, சிப்காட் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கோரி இருந்தது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம் நிபந்தனைகளுடன் சிப்காட் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதில், "விண்ணப்பத்தில் கூறியபடி தொழிற்சாலைகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும். வேறு எங்காவது தண்ணீர் எடுப்பதாக இருந்தால், அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைய நிலம் கொடுத்தவர்களுக்கு 10 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சிப்காட் அமைய உள்ள இடத்தில் 33 சதவீதம் அளவிற்கு மரம் நட்டு பசுமையை உருவாக்க வேண்டும்.
இதையும் படிங்க: கணியூர் ஊராட்சியின் புதிய முன்னெடுப்பு.. பிளாஸ்டிக் குப்பைகளால் உருவான சிசிடிவி கட்டுப்பாட்டு அறை!
அதேபோல் சாலை, மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர் நீர்நிலைகளில் கலக்காமல், மாசு ஏற்படாமல், இயற்கை கழிவுகள், அமிலக் கழிவுகள் என தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். சிப்காட் பகுதியில் புதிதாகத் தொடங்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் அனுமதி பெற வேண்டும்" உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைந்தால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்