சென்னை: விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் முழுக்க மக்களை திசை திரும்பும் செயலாகும். 10 ஆண்டுகள் காங்கிரஸ் - திமுக ஆட்சியிலும் , திமுக அமைச்சர்கள் இருந்த துறைகளிலும் இந்தி விழாக்கள் நடத்தப்பட்டன. இது புதிதாக நடக்கும் விழா கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடக்க கூடிய விழா தான் என்றார்.
திருக்குறளை கொண்டு சேர்த்துள்ளோம்:மேலும், தமிழை பாதுகாப்பதிலும், உலகம் முழுவதும் தமிழை கொண்டு செல்வத்திலும்முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. பாரதியார் பெயரில் சிறப்பு இருக்கை, உலகம் முழுவதும் திருக்குறளை கொண்டு சென்றது, உலகம் முழுவதும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைப்போம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டு உள்ளது. இதனை எந்தந்த நாடுகளுக்கு செல்கிறோமோ அந்த நாடுகளில் செய்து வருகிறோம். திருக்குறளை 35 உலக நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.
அத்துடன், ஜ.நா. சபையில் ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று முதன் முதலில் பிரதமர் பேசி, தமிழருக்கு பெருமை சேர்த்து உள்ளார். மூத்த தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
மன்னிப்பும் கேட்டுவிட்டனர்: முதலமைச்சர், கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விடுகின்றனர். திமுக ஆர்ப்பாட்டம் செய்கிறது. ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறுக்கு, அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள். இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. தர்மமும் கிடையாது. எல்லா விஷயத்திலும் அரசியல் செய்ய கூடாது.