மதுரை:தமிழ் மொழியின் மீதும், பண்பாட்டின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இந்திய பிரதமர் மோடி பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதில் மிகவும் அக்கறை காட்டி வருகிறார் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரை மக்களிடம் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டியில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அப்பகுதி மக்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நேற்று (ஜன.30) பாராட்டு விழா நடத்தினர்.
அதில் பங்கேற்று மேடையில் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "நாட்டின் வளர்ச்சியையும், ஏழைகளின் வளர்ச்சியையும் மோடி அரசு முன்னுதாரணமாக கருதுகிறது. அந்த வகையில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதும் அதன் பாரம்பரியத்தை பேணுவதையும் பிரதமர் நரேந்திர மோடி தனது கடமையாகக் கொண்டுள்ளார். அதன் காரணமாகத்தான் உலக நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் தமிழ் மொழியின் பெருமையும், பண்பாட்டையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் முனைப்பு காட்டுகிறார்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து பாராட்டு விழாவில் அண்ணாமலை மற்றும் அமைச்சர் கிஷன் ரெட்டி (ETV Bharat Tamil Nadu) அதன் தொடர்ச்சியாக தான் இந்திய நாடு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை துவங்கி வைத்த போது, தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் கொண்டு வந்து அங்கே வைத்து பெருமை சேர்த்தார். ஒரு கிராம சபை தேர்தல் என்பது எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு என்றைக்கும் சான்றாக திகழ்கிறது, அதையும் ஜி-20 மாநாட்டில் பேசினார். அதேபோன்று தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்டுக் கொடுத்ததில் பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு.
இதையும் படிங்க:"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேலூர் பகுதியை அறிவிக்க வேண்டும்" - அண்ணாமலை
காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் வாழ்கின்ற சவுராஷ்டிரா இன மக்களை ஒருங்கிணைத்து அங்கே பெருமைப்படுத்தினார். காசிக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போதும் கூட இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டிப்பதுடன் அவ்வப்போது அந்த மீனவர்களை மீட்டு கொண்டு வருவதில் மோடி அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் என்றார்.
அதன் தொடர்ச்சியாக தான் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து மேலூர் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு பிரதமர் மோடி செவி சாய்த்தார். புதுடெல்லி வந்திருந்த மதுரை விவசாயிகளை நான் சந்தித்த போது அவர்கள் இங்கே வருகை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த அடிப்படையில் உங்களை எல்லாம் சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலமும் நேரமும் எனக்கு வாய்ப்பளித்தால் மீண்டும் ஒரு முறை உங்களை நிச்சயம் நான் சந்திப்பேன்" என்றார்.