சென்னை:சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.இந்த விழாவில் இளங்கலையில் 2,144 மாணவர்கள், முதுகலையில் 817 மாணவர்கள், 95 ஆராய்ச்சி மாணவர்கள் மொத்தம் 3,056 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் 38 மாணவ மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழா மேடையில் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை பட்டியலில் விஐடி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 11-வது இடத்தை பிடித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றும் அப்படிப்பட்ட கல்லூரியில் பயின்று, இன்று பட்டங்களை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் எதிர்காலம் நீங்கள் தான், உங்களுக்காக இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது. 2047-இல் இந்தியா சுதந்திரம் அடைந்து நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது எங்களை வழிநடத்த போவது மாணவர்களாகிய நீங்கள் தான். இந்த 2024-இல் உலகளவில் செல்போன்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் சிறந்து விளங்க கூடிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை, லீனா நாராயணன், சத்ய நாராயண நாதெல்லா போன்ற பல்வேறு இந்தியர்கள் தான் வழி நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும், அதீத நம்பிக்கை வைத்துள்ளார். உலக அளவில் நீங்கள் எத்தகைய நிலைக்கு சென்றாலும், தாய் நாட்டையும், தாய்மொழியையும் மறக்கக்கூடாது" என்றார்.