திண்டுக்கல்:திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்புகள் கலந்திருப்பதாக புகார் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதிக்கு நெய் வழங்க ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனமும் ஒன்று. கடந்த ஜூன், ஜூலை என இரண்டு மாதங்கள் இந்நிறுவனத்தின் சார்பில் திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஏ.ஆர். டெய்ரீஸ் நிறுவனம் சார்பில் 8.50 லட்சம் கிலோ நெய் விநியோகிக்க ஆர்டர் வழங்கப்பட்ட நிலையில் 68 ஆயிரம் கிலோ நெய் இரண்டு மாதங்களில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நெய் தரமானது இல்லை எனக் கூறி ஒப்பந்தத்தை கடந்த ஜூலை 22ம் தேதி திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. இந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் (Black List) வைப்பதாகவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. கோயிலின் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளாராவ் இதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது விலங்கு கொழுப்பு நெய்யில் இருப்பதாக குற்றச்சாட்டு , பூதாகரமாகியுள்ள நிலையில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தானாக முன்வந்து விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தங்களது பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என செப்டம்பர் 20ம் தேதி தெரிவித்தனர்.
மேலும், திருப்பதி தேவஸ்தானம் எங்களது நெய் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்திய சான்று நாங்கள் அனுப்புவதற்கு முன்பு ஆய்வு செய்த சான்றும் தங்களிடம் உள்ளது என தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அனிதா, நிறுவனத்தின் கழிவு நீரை ஆய்விற்காக எடுத்துச் சென்றார்.