திருநெல்வேலி:இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. தபால் நிலையம், பத்திரப்பதிவு, வங்கி, மருத்துவமனை என பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. எனவே, ஆதாரில் உள்ள பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
மேலும், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள் 2016இன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வரும் 14ஆம் தேதியே ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்புக்கான கடைசி தேதி என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஆதார் மையங்களில் பொதுமக்கள் காத்திருந்து ஆதார் அட்டையை புதுப்பித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:4 நாளாக தொடரும் ஊழியர்கள் போராட்டம்.. "பண்டிகை நேரத்தில் இப்படியா" - கடுப்பான சாம்சங் நிர்வாகம்!
இதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகாலை ஐந்து மணி முதலே பொதுமக்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கு, பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஆதார் மையத்தில் காலை உணவு, குடிநீர் என எதுவும் இல்லாமல் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தங்களது ஆதாரில் கை ரேகை, கண் கருவிழி அடையாளங்களை புதுப்பித்து வருகின்றனர்.
மேலும், நெல்லை தலைமை தபால் நிலையம் மட்டுமல்லாது மாவட்டத்தின் பிற ஆதார் மையங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகளுடன் கூடிய கூடுதல் சேவை மையங்கள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு (Credit - ETV Bharat Tamil Nadu) இதனிடையே, வரும் 14ஆம் தேதியோடு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் முடிவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கால அவகாசம் டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் ஆணையம் நீட்டித்துள்ளது.