சென்னை:பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தேசிய கல்விக் கொள்கை -2020ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கு சென்னை ஐஐடியில் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை பல்கலைக் கழக மானிக்குழுவின் தலைவர் ஜெகதிஷ் குமார் தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இலக்கு: தொடக்க விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் ஜெகதிஷ் குமார், இந்தியாவில் வலிமையான, தரமான உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்வி நிறுவனங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு உறுதுணையாக இருக்கின்றன. இந்தியா தொழில்நுட்ப ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இங்குள்ள இளைஞர்கள்தான் காரணம். 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கு தொழில்நுட்பம் மேலம் வளர வேண்டும் என்றார்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) வித்யா லட்சுமி கல்விக் கடன் திட்டம்: மேலும், ''இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சமூக, பொருளாதார ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய சூழலில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வது என்பது உண்மையிலேயே பெரிய சவால்தான். தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் பிரதமரின் வித்யா லட்சுமி கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏழை மாணவர்கள் எந்தவித பிணையும் இன்றி வட்டியில்லா கடன் பெறலாம். இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், ''கல்லூரியின் முதல்வர்களிடம் கேட்டப்போது, உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி பிரச்சினையாக உள்ளதாக கூறுகின்றனர். ஆங்கிலம் தொடர்பு மொழிதான். எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர் கல்வி வழங்கப்பட வேண்டும். உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயர் கல்வி வழங்கப்படுகிறது. அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையில் தாய் மாெழியில் வழங்கலாம்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை; 'விரைவில் குறைகள் நீங்கும்' - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்..!
மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன் சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டியுள்ளது.சில மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழிலில் சிறந்து விளங்குவர்.. அவர்களின் தொழில் அறிவை
அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் படிப்பில் தொழில் அறிவுக்கு குறிப்பிட்ட கிரெடிட் வழங்குவது என பல்கலை கழக மானியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த புதிய முறையின்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு காலம் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி:பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி மற்றும் பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்பதுதான் பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறை. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பான பிரச்சினையால் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்படுவது சரியானதாக இருக்காது. உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு மூலமாக பல்கலைக்கழகத்தை எப்படி நிர்வகிக்க முடியும். துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி நியமிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.
பேராசிரியர் பணியிடங்கள்: அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டால் கற்பித்தல் பணியும் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படும். ஒப்பந்த முறையில் நியமிக்கப்படும் பேராசிரியர்கள் தங்கள் பணிநிலையை நினைத்து கவலைப்படுவார்கள் அவர்களால் கற்பித்தல் பணியை நிறைவுடன் மேற்கொள்ள முடியாது. கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளோம்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நிதி நெருக்கடி காரணமாக நியமிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது. பல்கலைக் கழகங்கள் நிதியை பெருக்குவதற்கு மாற்று ஏற்பாடுகளை ஆலோசிக்க வேண்டும். தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை அதிகரிக்கலாம். வருவாயை பெருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக்கட்டணத்தை எந்த வகையிலும் உயர்த்தக்கூடாது. ஆராய்ச்சி பணிகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் போன்றவற்றிடமிருந்து தாராளமாக நிதி பெறமுடியும்'' என இவ்வாறு ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்