சென்னை: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இது மீண்டும் சினிமா நட்சத்திரங்களின் காலமோ என எண்ணும் அளவுக்கு நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பின்னதான விவாதங்கள் சூடு பறக்கத் தொடங்கியுள்ளன. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் ஒரு திரைமுகம் மையம் கொண்டுள்ளது. இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமாக்களில் நடித்திருந்தாலும் மிகச்சுருக்கமான அவரது திரையுலக வாழ்க்கையை மற்ற நட்சத்திரங்களுடன் ஒப்பிட முடியாது.
கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை அறிவித்த விஜய், அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் வி.சாலையில் வெற்றிக் கொள்கை விளக்க மாநாட்டை நடத்தி கட்சிக்கான கொள்கைகளையும் அறிவித்தார். இதில் மதபிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் ஒழிப்பு என இரண்டு அம்சங்களை முன்னிறுத்தப் போவதாக விஜய் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டை ஆளும் கட்சி என குறிப்பிட்டு திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைத்தார்.
விஜயின் மாநாட்டுக்கு முதல் நாளே உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்த போதிலும், மாநாட்டுக்குப் பின் இது தொடர்பான கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துவிட்டார். மு.க.ஸ்டாலின், கனிமொழி என திமுக முன்னிலைத் தலைவர்களிடமும் இதற்கான பதில் இல்லை. ஆனால் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தொடர்ச்சியாக விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். துபாயில் நடைபெறும் GT3 கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக (24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class) இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை 'அஜித் குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உதயநிதி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்ட உதயநிதி, விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித்" என பதிவிட்டுள்ளார்.
இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்றாலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் "ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்ற வார்த்தையுடன் உதயநிதி பதிவிட்டிருப்பதை அரசியலாக்கும் முயற்சியும் நடைபெறாமல் இல்லை. இதனை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், "உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என எனக்கு தெரியாது" எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: