சென்னை: சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மூலம் சென்னையை உலக விளையாட்டு நகரமாகவும், உலகளாவிய போட்டிகளுக்கு சிறந்த இடமாகவும், விளையாட்டு வீரர்களுக்கு உயர் செயல் திறன் பயிற்சி மையமாகவும் உருவாக்க விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தின் கட்டடப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளில், அரசு ஏற்கனவே 61 தொகுதிகளில் பல்வகையான விளையாட்டு அரங்கங்களை அமைத்துள்ளது. அந்த விளையாட்டு அரங்கங்களில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட பிரபலமான விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் 5 விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சட்டமன்ற தொகுதிகளின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மீதமுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் சிறு விளையாட்டு கட்டடப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க:காவிரி விவகாரம்; தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் தஞ்சை, திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம்! - CAUVERY ISSUE Protest in TN