சென்னை:சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 48 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர். டி. சேகர், தலைமை வகித்தார். மேலும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர்,
பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், செந்தில்குமார், வ.பெ. சுரேஷ், ஜெயராமன், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்த நிலையில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் 48 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், “தமிழகத்தில் சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. அண்ணா ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். கலைஞர் மகளிர் உதவி தொகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கபடுவதன் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்கள் பயனடைகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் படித்து, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் வழங்கியுள்ளார்.