சென்னை: ஆவடி அருகே அண்ணன், தம்பி இருவரை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொலை செய்த மர்ம கும்பலை 5 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இருவருக்கு ரெட்டைமலை சீனிவாசன் (27), ஸ்டானின் (24) என இரு மகன்கள் உள்ளனர். மேலும், ரெட்டைமலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளனர். அதேபோல, அவரது தம்பி ஸ்டாலின் ரவுடி பட்டியலில் C-ல் இடம் பெற்றவர்.
இந்த நிலையில், நேற்று (ஜன.18) அண்ணன், தம்பி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஸ்டாலின் வீட்டின் அருகே ஆயில்சேரியிலும், அண்ணன் ரெட்டைமலை சீனிவாசன் ஆவடி பகுதியிலும் என இருவரும் தனித்தனியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க:கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை? - போக்சோ வழக்கில் சிக்கிய காவலர்!
முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக மர்ம கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது வாக்குவாதம் முற்றியதில் மர்ம கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த அருவாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால் இருவரையும் தாக்க முயன்றதாகவும், அதனைக் கண்டு பட்டாபிராம் நோக்கி ஸ்டாலினும், ஆவடி நோக்கி ரெட்டைமலை சீனிவாசனும் பதறி ஓடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விடாமல் மர்ம கும்பல் இரு குழுக்களாகப் பிரிந்து இருவரையும் துரத்தியுள்ளனர். அப்போது, பட்டாபிராமில் ஸ்டாலினையும், ஆவடியில் ரெட்டைமலை சீனிவாசனையும் வெட்டி படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இவர்களது முதல் அண்ணன் கக்கன் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரெட்டைமலை சீனிவாசனும், ஸ்டாலினும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது, கஜேந்திரனுக்கு இருந்த மூன்று மகன்களும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கவும் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, ஐந்து தனிப்படை அமைத்து கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதியில், இந்த இரட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.