சென்னை:கேரள மாநிலத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியால், சுமார் 300க்கும் மேற்பட்ட கேபின் குழு ஊழியர்கள் ஒரே நேரத்தில் சிக் லீவ் எடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்றிரவு 10.40 மணிக்கு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு நள்ளிரவு 11.50 மணிக்கு வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானமும், இன்று அதிகாலை 12.30 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால், விமானங்களில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், பெரிய அளவில் சலசலப்பு ஏற்படவில்லை. இருப்பினும், பயணிகள் போர்டிங் கேட்டில் காத்திருந்தபோது திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதாக வந்த அறிவிப்பு பயணிகளை எரிச்சலடையச் செய்தது.
இதனால் விமான நிறுவன நிர்வாகத்தின் மீது கடுப்பான பயணிகள், ஏர் இந்தியா நிர்வாகத்தை குற்றம் சாட்டி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்பினர். விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.