நீலகிரி: கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஷத்தினால் புலிகள் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் அருகே, பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நிலா கோட்டை பகுதியில் தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இரு புலிகளின் சடலங்களையும் மீட்டு, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரண்டு புலிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த நிலையில், இறந்த காட்டுப்பன்றி உடல் அருகில் புலிகளின் கால் தடங்கள் இருந்துள்ளது. இவை இறந்த இரு புலிகளின் கால் தடங்களா? என்று சோதனை செய்யப்பட்டது. இதில் இறந்த காட்டுப்பன்றி அருகில் இருந்த புலிகளின் கால் தடங்கள், இறந்த 2 புலிகளின் கால் தடங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், காட்டுப்பன்றியின் உடலை பெருமளவில் புலிகள் சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. புலிகளைப் பரிசோதனை செய்ததில் அவற்றின் வயிற்றில், அரிசி, மரவள்ளிக் கிழங்கு மற்றும் காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், விஷத்தினால் 2 புலிகள் இறந்திருக்கக்கூடும் என மருத்துவர்களால் அறியப்படுகிறது.