சென்னை:திருவொற்றியூர் பகுதியில் இரண்டு உடல்கள் கடலில் மிதப்பதாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் படி, அங்கு திருவெற்றியூர் போலீசார் சென்றனர். பின்னர் கடலில் மிதந்த 14 வயது மாணவன் மற்றும் 15 வயது மாணவி ஆகிய இருவரது உடலையும் மீட்டனர்.
பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில், இரண்டு மாணவர்களும் துப்பட்டாவை கையில் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இருவரும் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரையும் காணவில்லை என்று நேற்று காலை புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவர் தற்கொலை:தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன் (20), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடம் சென்னை தாம்பரத்தில் உள்ள தன்னுடைய சக கல்லூரி நண்பர்களுடன் தனியார் விடுதியில் வசித்து வந்த நிலையில், நேற்று மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்துத் தங்கி உள்ளார்.
இதை அடுத்து அரையை சுத்தம் செய்யும் நபர், அறைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கதிரவன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விடுதி மேலாளர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் போலீசார், உயிரிழந்த கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூம் போட்டு ப்ளான்! சென்னையில் தொடர் திருட்டு:சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி(69). மத்திய அரசின் தணிக்கை துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினருடன் சௌகார்பேட்டைக்கு வந்தார்.
பொருட்களை வாங்கிவிட்டு திரும்பிய போது கூட்டமாக அங்கு வந்த சில பெண்கள், வசந்தகுமாரி உரசிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வசந்தகுமாரி அவரது கைப்பை திறந்து பார்த்த போது, அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்ததும், அதிலிருந்த ரூ.11 ஆயிரம், கிரெடிட் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவை திருடு போயிருந்ததும் தெரியவந்தது. இதேபோல, மின்ட் தெருவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பூஜா(30) என்ற பெண்ணிடம் இருந்து ரூ.12 ஆயிரம் திருடி சென்றுள்ளனர். மேலும் இதே போன்று ஒரு மணி நேரத்தில் 4 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
இது தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து யானைக் கவுனி போலீசாருக்கு சென்ற நிலையில், போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இதில் ஆந்திராவை சேர்ந்த திருட்டு கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
ஆந்திராவை சேர்ந்த கும்பல் பிடிபட்டது எப்படி?:இதையடுத்து திருட்டு கும்பலை தப்பிவிடாமலிருக்க, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபடியே போலீசார் பின் தொடர்ந்து சென்றபோது திருட்டு கும்பல் பெரிய மேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறைகள் எடுத்துத் தங்கி இருப்பது தெரியவந்தது. மின்ட் தெருவில் கைவரிசை காட்டிவிட்டு, லாட்ஜுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தியாகராய நகருக்கு புறப்பட்டபோது போலீசார் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பிடிபட்டவர்கள் சுசீலா (60), ஜம்முலம்மா(30), வெங்கடம்மா(50), சங்கீதா(23), நாகமணி(40), சேகர்(65), சையது ஹாஜா(32), சட்டக் கல்லூரி மாணவர் நாகேஸ்வரராவ் (32)மற்றும் ஒரு 13 வயது சிறுவன் என தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு சென்று அறைகள் எடுத்து தங்கிக் கூட்டநெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருடிய பொருட்களை ஆந்திராவில் விற்று ஆடம்பரமான வாழ்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுடன் வந்த 13 வயது சிறுவனை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 வரை நீதிமன்றக் காவல்!