தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு கிப்ட்” சினிமாவை மிஞ்சிய கொலை.. சிக்கியது எப்படி? - woman murder at car - WOMAN MURDER AT CAR

2 Persons Arrested For Trying To Bury the Dead Body: கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை சாலையோரம் புதைக்க முயன்றபோது, கார் மற்றும் இருசக்கர வாகனத்துடன் கொலையாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of arrested persons
கைது செய்யப்பட்ட நபர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 4:02 PM IST

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே, நேற்று (மே 10) இரவில் கார் மற்றும் பைக்கோடு சந்தேகப்படும்படியாக சாலையோரமாக நின்று கொண்டிருந்த இருவரை, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்ட மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனை செய்துள்ளனர். அப்போது, அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ரோந்து போலீசார், அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கார் மற்றும் பைக்கோடு நின்று கொண்டிருந்த இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த திவாகர் (24) மற்றும் இந்திரகுமார் (31) என்பதும், இதில் திவாகர் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், திவாகருக்கும், அவர் பணியாற்றிய அதே மில்லில் வேலை செய்த பிரின்சி (27) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இது குறித்து திவாகரின் மனைவி உமாபாரதிக்கு தெரியவந்ததை அடுத்து, திவாகர் கடந்த ஒரு மாதமாக பிரின்சியின் தொடர்பை துண்டித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், திவாகரிடம் பணம் மற்றும் நகை போன்றவற்றைக் கேட்டு பிரின்சி தொடர்ந்து தொல்லை செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த திவாகர், பிரின்சியை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள தனது உறவினர் இந்திரகுமாரை பல்லடத்திற்கு ஆம்னி கார் ஒன்றை எடுத்து வரச்சொல்லிய திவாகர், காரில் வந்த உறவினர் இந்திரகுமாருடன் சேர்ந்து பிரின்சிக்கு போன் செய்து அழைத்துள்ளனர்.

திவாகர் அழைத்த இடத்துக்கு வந்த பிரின்சியிடம், "காரில் உனக்கு கிப்ட் வைத்துள்ளேன். நீ கண்ணை மூடிக்கொள், அந்த கிப்டை உனக்குக் கொடுக்கிறேன்" என்று திவாகர் கூறியதாகவும், பரிசுப் பொருளைப் பெறும் மகிழ்ச்சியில் பிரின்சி கண்ணை மூடிய போது காரில் மறைத்து வைத்திருந்த நைலான் கயிறால், திவாகரும், அவரது உறவினர் இந்திரகுமாரும், பிரின்சியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து, நேற்று (மே 11) காலை கொலை செய்யப்பட்ட பிரின்சியின் உடலை புதைக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக மண்வெட்டி, கடப்பாரை போன்றவற்றை எடுத்துக்கொண்டு, நேற்று (மே 11) இரவு பிரின்சியின் உடலை காருக்குள் வைத்துக்கொண்டு, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழிச்சாலை வழியாக மதுரை நோக்கி காரை திவாகரின் உறவினர் இந்திரகுமார் ஓட்டிச் சென்றுள்ளார்.

காரை பின் தொடர்ந்து திவாகர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி பிரிவில் இரவில் காரை சாலையோரம் நிறுத்தி, பிரின்சி உடலை புதைக்கத் திட்டமிட்டபோதுதான், அந்த வழியாக ரோந்து சென்ற போலீசாரிடம் இருவரும் சிக்கியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, திவாகர் மற்றும் அவரது உறவினர் இந்திரகுமார் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாது, இந்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:10 பேர் உயிரிழந்த விவகாரம்..சிவகாசி பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமம் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details