தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்ரிமோனி இணையதளம் மூலம் பெண் மருத்துவரிடம் கோடிக் கணக்கில் மோசடி.. நைஜீரியர்கள் இருவர் கைது.. - Chennai Cyber Crime Police

matrimonial website defrauding: சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் 2.87 கோடி ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

matrimonial website defrauding
மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பண மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 5:52 PM IST

சென்னை: சென்னை கே.கே.நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "திருமணத்திற்காக மேட்ரிமோனியில் இணையதளம் மூலம் பதிவு செய்திருந்தேன். இதை அடுத்து வெளிநாட்டில் இருந்து ஒருவர் தான் அலெக்சாண்டர் சாண்சீவ் என அறிமுகம் செய்து கொண்டு வாட்ஸாப்பில் பேசத் தொடங்கினார்.

மேலும், அந்த நபர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததால் நானும் தொடர்ந்து அவரிடம் பேசி வந்தேன். இந்த நிலையில், அவர் எனக்கு மதிப்புமிக்க பரிசு ஒன்றை அனுப்பி வைத்தார். இதனை அடுத்து, டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பேசுவதாகக் கூறி செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் உங்கள் பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது அதற்கு வரி கட்டினால் மட்டுமே உங்களிடம் அந்த பொருள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

இதை உண்மை என நம்பிய நான், பல்வேறு வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடியே 87 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தேன். இதை அடுத்து, என்னிடம் பேசி வந்த நபரையும் சுங்கத்துறை அதிகாரி என்று பேசியவரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளேன். ஆகவே, எனது பணத்தை மீட்டு மோசடி செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண் மருத்துவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கின் விவரங்களைச் சேகரித்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் டெல்லி, மேகாலயா, கேரளா, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஊர்களின் போலியான முகவரிகளில் வாங்கிய செல்போன் எண் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மோசடி செய்த வங்கிக் கணக்குகளின் ஏடிஎம் பணம் பரிவர்த்தனை டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் டெல்லி சென்று அங்கு பதுங்கி இருந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுபுச்சி (29) மற்றும் சினேடு (36) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் 40 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து, கைது செய்யப்பட்ட நபர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இது போன்ற மேட்ரிமோனி இணையதளத்தில் பரிசு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி!

ABOUT THE AUTHOR

...view details