சேலம்:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது இளம் பெண்ணுடன் தோழியாக பழகி வந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஸ்மார்ட்ஃபோன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் தனிதனியாக இரு வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில், 17 வயது சிறுமிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வா (24) என்பவருடனும், 19 வயது இளம் பெண்ணிற்கு சேலம் குப்பனூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 21) எண்பவருடனும் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதல் ஜோடிகள் அவரவர் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வீட்டில் தங்கள் காதல் தெரிந்துவிடும் என்பதால் தோழிகள் இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு திடீரென ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் ஆத்தூர் ஊரக காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஓட்டம் பிடித்த தோழிகள் இருவரும் தங்களது காதலர்களுடன் கோவையில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று நால்வரையும் பிடிக்க முயன்றபோது 17 வயது சிறுமியுடன் இருந்த கேரள மாநில வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து ஒரு காதல் ஜோடியையும், 17 வயது சிறுமியையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் மூன்று பேரின் பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இளம்பெண் தன் பெற்றோருடன் செல்ல மறுத்து, காதலருடன் தான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 19 வயது இளம்பெண் தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அவரின் குடும்பத்தினருடன் சென்றார். ஆனால் 17 வயது சிறுமி மைனர் என்பதால் பெற்றோருடன் தான் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். அதற்கு அந்த சிறுமி மறுத்ததால் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பத்தால் இருவீட்டாரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 5 பேர் பலி? - காவல்துறை மறுப்பு; அரசியல் தலைவர்கள் விமர்சனம்!