சென்னை:நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பல்கைக்கழக துணைவேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு வரும் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த மாநாட்டில், ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் குறித்த விரிவான விவாதங்கள், விளக்கங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டின் முதல் நாள் அமர்வுகள் (27.05.2024):
- "பல்கலைக்கழகங்களுக்கான நிறுவன மேம்பாட்டுத் திட்ட தொலைநோக்கு ஆவணம்" என்ற தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் உரையாற்றுகிறார்.
- "எதிர்கால சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல்" என்ற தலைப்பில் காரக்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் பேராசிரியர் பார்த்தா சக்ரபர்தி உரையாற்றுகிறார்.
- "புதுமை மற்றும் தொழில்முனைவு" என்ற தலைப்பில் CISCO இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் ஸ்ருதி கண்ணன் உரையாற்றுகிறார்.
- "தேசிய சிறப்பு கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் உரையாற்றுகிறார்.