தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி; சென்னையில் பெண் உட்பட இரண்டு பேர் கைது...! - SEETU SCAM

பள்ளிக்கரணையில் ஏலச்சீட்டு நடத்தி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாலட்சுமி, அசோக் குமார்
மகாலட்சுமி, அசோக் குமார் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2025, 6:18 AM IST

சென்னை: சென்னை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியான்பேட்டை சுப்ரமணி நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (35). வீராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அசோக் குமார் (33). இருவரும் சேர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை பகுதியில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் மகளிர் சுய உதவி குழுவும் நடத்தி வந்துள்ளனர்.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால், சீட்டு முடிந்த பிறகு சரிவர பணமும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று திருப்பி கொடுத்தவர்கள் பணத்தையும் வங்கியில் திருப்பி கட்டவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றபிரிவு ஆய்வாளர் தீபக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோடிக் கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

பள்ளிகரணை காவல் நிலையத்தில் சசிகலா, சுமதி சக்திவேல், ராஜாத்தி, சத்தியா, ஷாலினி, காமேஷ், கன்னியாகுமரி, சண்முகம், பரமேஸ்வரி என 9 நபர்களின் புகாரில் மட்டும் 75,33,500 ரூபாய் பணம் ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது.

இதையும் படிங்க:வண்டலூரில் சோகம்... நள்ளிரவில் தண்டவாளத்தில் கிடந்த சடலங்கள்.. போலீஸ் அதிர்ச்சி தகவல்!

இதையடுத்து மகாலட்சுமி மற்றும் அசோக் குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை செய்ததில், இருவரும் சேர்ந்து சீட்டு கட்டியவர்களுக்கு, சீட்டு முடிந்தவுடன் பணத்தை தராமல் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளனர். வட்டிக்கு வாங்கியவர்கள் பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணத்தில் கார், புல்லட், இரண்டு ஆட்டோக்கள் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பலர் புகார் கொடுத்தால் கோடிக் கணக்கில் வரும் பட்சத்தில் வழக்கை தாம்பரம் மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி வந்து பண மோசடியில் ஈடுபட்டு அந்த பணத்தை வைத்து கார், பைக் என சொகுசாக வாழ்ந்து வந்த பெண் உட்பட இரண்டு பேர் கைதான சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details