திருப்பத்தூர்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, கந்திலி, ஆலங்காயம், திருப்பத்தூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மது மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்றதாக 28 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், விக்னேஷ், குமுதா, சங்கர், ரமேஷ், சுமதி, சேகர், மாதப்பன், செல்வி, உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக பலரை போலீசார் தேடி வருவதாக போலீசார் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் விற்றதாக ஏற்கனவே கைது செய்து சிறையில் உள்ள கந்திலி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மற்றும் கோரிப்பள்ளம் பகுதி சேர்ந்த முருகன் ஆகிய இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.. வாழ்வாதாரம் போய்விட்டதாக தவிக்கும் கடைக்காரர்கள்... தாம்பரத்தில் நடந்தது என்ன? - TAMBARAM ENCROACHMENT ISSUE