சென்னை:ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குக் கடந்த 15ஆம் தேதி வந்த நான்கு மர்ம நபர்கள் பிரகாஷிடம் துப்பாக்கியைக் காட்டி கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு தாங்கள் கொண்டு வந்த பையில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.5 லட்சம் பணம், ஐபோன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் பிரகாஷ் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் 8 தனிப் படை அமைத்து ஆந்திரா ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் தேடுதல் வேட்டையைத் துவக்கினர். கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.