சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், குடிநீர் வழங்கல் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.7,890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 6,802 ஊரகக் குடியிருப்புகளில் வசித்து வரும் 40 லட்சம் மக்கள் பயனடைவர். அப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் உதவும்.
மேலும், கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சியிலுள்ள சுமார் 65,000 மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கும் பொருட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்திற்குத் தேவையான நீரை வழங்கும் பொருட்டும், ஒரு கூட்டுக் குடிநீர்த்திட்டம் ரூ.366 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.