தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"யாராக இருந்தாலும் சபை மரபை பின்பற்ற வேண்டும்" - கருத்து சொன்ன விஜய்! - TVK VIJAY ABOUT GOVERNOR RN RAVI

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியுள்ள நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்,  ஆளுநர் ஆர்.என்.ரவி
தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 3:40 PM IST

Updated : Jan 6, 2025, 5:08 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை (ஜனவரி 06) தொடங்கியது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி, ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதற்கு, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன" என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்துள்ளார்.

இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிகழ்வுகளை, உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

இதையும் படிங்க:ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் - சிறப்புத் தீர்மானம்

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போதும் மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்தப் போக்கினை கைவிட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம்பெற வேண்டும். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே, சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்” என்று தமிழக அரசை தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : Jan 6, 2025, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details