சென்னை:சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நான் இன்று சட்டமன்றத்தில் முக்கியமான கருத்தை முன்வைக்க முயன்றேன். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அந்த கருத்து என்னவென்றால், யுபிஎஸ்சி தேர்வு நடத்தும் உயர்பதவிகளில் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மருத்துவம் படிப்பதற்கு எப்படி மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி இருக்கிறதோ, பொறியியல் படிப்பு படிப்பதற்கு எப்படி பொறியியல் கல்லூரி மாவட்டம்தோறும் இருக்கிறதோ, அதேபோல தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் ஒரு யுபிஎஸ்சி பயிற்சி நிலையம் மற்றும் ஒரு டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிலையம் வைக்க வேண்டும்.
இதனை தமிழ்நாட்டில் சாதி, மதங்களை கடந்து அனைத்து மாணவர்களும் அரசினுடைய முழு செலவோடு சர்வதேச தரத்தில் அங்கு பயிற்சி மையங்களை உருவாக்கி, சர்வதேச நூலகங்களும் அங்கு உருவாக்கி, இளைய தலைமுறை மாணவர்கள் இந்தியாவில் நடைபெறும் யுபிஎஸ்சி போட்டி தேர்வில் உயர் இடத்தைப் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என்னுடைய மிகவும் பின்தங்கிய பண்ருட்டி தொகுதியில் இரண்டு சகோதரிகள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுடைய கருத்தும் கூட இது தான்.
அரசு இதே போன்ற வசதிகளை மாவட்டம் தோறும் பயிற்சி மையங்களையும், தங்கும் விடுதிகளையும் உருவாக்கினால் தமிழக மாணவர்களால் இந்திய அளவில் மிகச் சிறந்த அளவில் முதல் மூன்று இடங்களை பெற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள். அதற்கான கோரிக்கைகளை முன்வைக்க இன்று சட்ட பேரவையில் எழுந்து நின்றேன். ஆனால் பேரவை தலைவர் என்னை பேச அனுமதிக்கவில்லை. சட்டசபையில் கிடைக்காத வாய்ப்பை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறேன்.