சென்னை :ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. அதுமட்டுமின்றி தலைநகரான சென்னையும் பாதிப்பை சந்தித்தது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட டிபி சத்திரம் பகுதி மக்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து அரிசி, பருப்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை தவெக தலைவரும், நடிகருமான விஜய் வழங்கினார்.
அந்த சமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்கள் வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், நேரில் வந்தால் உங்களுடன் அமர்ந்து பாதிப்புகளை பற்றி இயல்பாக பேச முடியாது. அதனால் தான் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்கள் வழங்கினேன் என விளக்கமளித்தார். முன்னதாக, தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெற்றது.