விக்கிரவாண்டி / விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று தொடங்கியிருக்கும் நிலையில், தொண்டர்கள் சூழ்ந்திருந்த அரங்கிற்கு கட்சியின் தலைவர் விஜய் வந்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் தொண்டர்களை வரவேற்கும் விதமான, மேடையுடன் இணைக்கப்பட்டிருந்த நடைபாதையில் நடந்துசென்று அவர்களை கையசைத்து வரவேற்றார்.
அப்போது, தொண்டர்கள் தங்கள் கையில் இருந்த கட்சிக் கொடி துண்டுகளை விஜய்யின் மீது வீசி வரவேற்றனர். அந்த நேரத்தில் கீழே விழுந்த துண்டுகளை எடுத்து தன் தோளில் போட்டபடி தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு இடையே நடந்து சென்றார்.
தொடர்ந்து ராணுவ உடை அணிந்திருந்த ஒருவர் நடைபாதையின் மீது ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்தார். உடனடியாக நின்று அவருக்கு பதில் சல்யூட் அடித்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார் விஜய்.
தொடர்ந்து ஒருவரின் செல்போன் நடைபாதையில் விழுந்ததை எடுத்துக் கொடுத்த அவர், வரவேற்பை முடித்துவிட்டு மொழிப்போர் தியாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் மன்னர்கள் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்று மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதல் மாநில மாநாடு இதுவாகும். எனவே, விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்து மக்களும், தொண்டர்களும், ரசிகர்களும், அரசியல் கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.